மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
கடந்த 5 ஆண்டு கால சாதனைகளை முன் வைத்து பிரசாரம் செய்து மக்களின் அமோக ஆதரவோடு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 354 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து வரும் 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார்.
அப்போது, சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் அருகே அமைந்துள்ள பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். அப்போது, பாஜக தலைவர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரும் உடனிருந்தனர்.
இதையடுத்து அகமதாபாத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் மோடி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, குஜராத்தில் 26 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் மோடி இங்கு வந்துள்ளார், இதற்காக நீங்கள் போடும் உற்சாக சத்தம் மேற்கு வங்கத்தில் கேட்க வேண்டும் என கூறினார்.