கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா உயிர்கொல்லி உலகத்தையே ஆட்டிப்படைத்து வந்தாலும், கடந்த ஒரு மாத காலமாக ஒருவித அச்ச உணர்வோடு வாழ்கின்ற சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை சராசரியாக 20 விழுக்காடு உள்ளதாகவும், இதில் மேற்கு மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் மேலாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மே 27ஆம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 361 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையும், அதில் 11 ஆயிரத்து 584 நபர்கள் மேற்கு மண்டலத்தை சேர்ந்தாவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்து 734 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதையும், கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருப்பதையும் தெரிவித்துள்ளார்.
மொத்தம் ஏற்பட்ட 474 மரணங்களில், மேற்கு மண்டலத்தில் மட்டும் 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசு மேற்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நோய்த்தொற்றின் வேகத்திற்கு ஏற்ப அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ள அவர்,
ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்றால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.