வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திலுள்ள 1 நபருக்கு அரசு வேலை

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினரின் உயிரிழப்பு கேட்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களான தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியைச் சேர்ந்த சுப்ரமணியனும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவச்சந்திரனும் உயிரிழந்ததையும் அறிந்து, மிகுந்த வேதனை அடைந்ததாக கூறினார்.

தமிழகத்தை சேர்ந்த உயிரிழந்த மத்திய பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், சுப்ரமணியன் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும், அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற அறிவுறுத்தி இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜனையும், அரசு கொறடா ராஜேந்திரனையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீரமரணமடைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version