நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய தமிழக அரசிற்கு ஆசிரம நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
1925 ஆம் ஆண்டு, காலகட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பாசறை களமாக மூதறிஞர் ராஜாஜியால் நாமக்கல் திருச்செங்கோடு அருகே கட்டப்பட்ட காந்தி அசிரமம் 94 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆசிரமத்தில் கதர் உற்பத்தி, கைவினைப் பொருள்கள், உள்ளிட்ட 29 வகையான பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இதன் மூலம் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தற்போது இதன் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில், காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரமத்தை மேம்படுத்த அதன் பணியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த 2 கோடி ரூபாய் மானியம் அளிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆசிரம நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் தமிழக அரசிற்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.