கிராமங்களில் உள்ள வீடுகளில் காய்கறி உற்பத்தி செய்ய, இயற்கை உரத்துடன் கூடிய விதைத் தொகுப்பை வழங்க 3 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் ஊரக காய்கறி உற்பத்தித் திட்டத்தை ஊக்கப்படுத்த 3 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை இயக்குனர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் சுமார் 6 கோடியே 30 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு, தினமும் 18 ஆயிரத்து 913 மெட்ரிக் டன் காய்கறி தேவைப்படுவதாகவும், ஆனால் 14 ஆயிரத்து 602 மெட்ரிக் டன் காய்கறிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, காய்கறி பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தலா 100 விதைத் தொகுப்புகளை, 100 சதவீத மானியத்தில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் முருங்கை, தக்காளி, கத்தரி, அவரை, பாகற்காய், பூசணி, புடலங்காய் விதைகள் இடம்பெற்றிருக்கும். அதனுடன் ஒரு கிலோ இயற்கை உரமும் இருக்கும். இதன் விலை 25 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 15 ஆயிரத்து 820 ஹெக்டேர் நிலப்பரப்பில் 4 லட்சத்து 38 மெட்ரிக் டன் காய்கறி உற்பத்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை ஊக்கப்படுத்த 3 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.