தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அரசுக்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாக கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான சிட்கோவின் நிலத்தை, முன்னாள் மேயரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன், அவரது மனைவி காஞ்சனாவுக்கு மாற்றம் செய்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உய்ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு இடத்தை மோசடி செய்து அபகரித்துள்ளதாகவும், அவரிடமிருந்து இடத்தை மீட்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, புகாரின் பேரில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.