அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது எந்தவித இரக்கமும் காட்டாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவில் உள்ள மிடாலம் கிராமத்தில், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, அதற்கு பட்டா வழங்க வேண்டும் என்று தங்கப்பன் என்பவர் விளவங்கோடு தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்திருந்தார். ஓடை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்க முடியாது என்று, தங்கப்பனின் மனுவை தாசில்தார் நிராகரித்ததை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் தங்கப்பன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி சுப்ரமணியன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காணும்படியும், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது எந்தவித இரக்கமும் காட்டாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.