அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு என்றும் புறந்தள்ளியதில்லை என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 7வது ஊதிய குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டில் ஊதிய குழுவை அமைத்து, இந்தியாவில் முதல் மாநிலமாக, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அறிவித்தது தமிழக அரசுதான் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆண்டுக்கு 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும், அரசு ஊழியர்களின் நலன் கருதி ஊதிய உயர்வை அரசு அமல்படுத்தியதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசும், அரசு ஊழியர்களும் ஒன்றுபட்டு உழைத்தால் தான் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே, சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனை கருதி தியாக உணர்வோடு பணியாற்றுவது கடமை என்பதை அரசு ஊழியர்கள் உணர வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, புயல் பாதிப்புகளை நினைவுக் கூர்ந்துள்ள முதலமைச்சர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு வளர்ச்சி பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டியுள்ளதாக கூறியுள்ளார். ஆகவே, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version