திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.
விஜயவாடாவில் இருந்து குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்த அமராவதி சொகுசு பேருந்தும், சபரி மலையில் இருந்து தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவுக்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலா பேருந்தும் திருப்பதி அருகே உள்ள காசிபெண்ட்லாவில் அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிவேகத்தில் சென்ற இரு பேருந்துகளும் மோதிக்கொண்ட இந்தக் கோர விபத்தில் அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான உதவியாளர் என 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 36 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பூத்தட்டு காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், இரு பேருந்து ஓட்டுநரும் அதிவேகத்தில் பேருந்தை இயக்கியதே விபத்திற்கு முக்கிய காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.