உத்தரப்பிரதேசத்தில், பட்டியலின பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச்சேர்ந்த 20 வயதான பட்டியலினப் பெண், தன் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கு கடந்த செப்.14ம் தேதி புல் எடுக்க வயல்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யமுயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் அந்த பெண்ணின் நாக்கும் பலத்த சேதமடைந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அலிகர் ஜே.என்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்தும், குற்றவாளிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக, இந்த விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுக்க, பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரும் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த திங்கட்கிழமை டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று (கடந்த செப்.29ம் தேதி) உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் பெண்ணின் உடலை ஒப்படைக்காமல் காவல்துறையினரே நள்ளிரவில் தகனம் செய்தனர்.
பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக பீம் ஆர்மி அமைப்பு, காங்கிரஸ் கட்சி உள்பட பலர் போராட்டங்களை நடத்தினர். விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, நடிகர் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரிதேஷ் தேஷ்முக் உள்பட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில உள்துறை செயலாளர் தலைமையிலான விசாரணைக்குழு, முழுமையாக விசாரண நடத்தி, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் “பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக என்னிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்; பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பவிட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், கடந்த ஆண்டு தெலங்கனா மாநிலம் ஹைதராபாத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி உயிரிழந்த விவகாரம் போல, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.