கங்கையில் ஒதுங்கிய சடலங்கள்- உ.பி. அரசு மீது பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு

பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில், கங்கை நதியிலிருந்து, மீட்கப்பட்ட 71 உடல்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற முறையில் உடல்களை வீசி இறந்தவர்களையும், கங்கை நதியையும் கலங்கப்படுத்த வேண்டாம் என பீகார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது

சவுஸா நகரின் கங்கை நதியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் மிதப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள், நகராட்சிக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அழுகிய நிலையிலும் பாதி எரிந்த நிலையிலும் மீட்கப்பட்ட உடல்களை, நகராட்சி பணியாளர்களே அடக்கம் செய்தனர். கொரோனா சமயத்தில் இதுபோன்று உடல்கள் மீட்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

உடல்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுக்கு பிறகே உண்மை நிலை தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சவுஸா நகரில், விறகுகள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களே உடல்களை கங்கை நதியில் வீசியுள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதனை மாவட்ட ஆட்சியர் அமர் சமீர் மறுத்துள்ளார்

இதுபோன்று உடல்கள் மீட்கப்படுவது முதல்முறையல்ல என்றும், அடிக்கடி இவ்வாறு சிதைந்த உடல்கள் கங்கை நதியில் மிதப்பதைக் கண்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்த உடல்கள் உத்தரபிரதேச மாநிலம் வாராணசி மற்றும் அலகாபாத் பகுதிகளில் இருந்து கங்கை நதியில் வீசப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகளிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. கங்கை நதியில் உடல்களை வீசி இறந்தவர்களையும், கங்கை நதியையும், உத்தரப்பிரதேச அரசு அவமதித்து விட்டதாக பீகாரின் மாநில அமைச்சர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார். இனியாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version