காந்தியின் கொள்கைகளோடு இயங்கி வரும் ஒற்றுமை நிலையம்

சென்னை பெரம்பூரில், மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட அலுவலகம் சுமார் 100 ஆண்டுகளை கடந்து இன்று வரை ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை இன்று உலகமே கொண்டாடி வருகிறது. அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றுத் தந்ததால் உலகமே மகாத்மா என்று அவரை அழைக்கிறது. உலகமே போற்றும் இந்தியாவின் தேசத் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி, 1927ம் ஆண்டு அப்போதைய மதராசப்பட்டினத்தின் பெவலூர் என்றழைப்பட்ட, இப்போது சென்னையின் பெரம்பூர் என்றழைக்கப்படும் இடத்துக்கு வந்துள்ளார்.

அப்போது, ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ரயில் கம்பெனியில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கென அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்திற்கான அடிக்கல்லை 1927ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி, மனைவி கஸ்தூரிபாய் தனது கையால் கல்லை எடுத்து கொடுக்க, மகாத்மா காந்தி இந்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் திருக்கரத்தால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த அலுவலத்தில் கடந்த 100 ஆண்டுகளாக தொழிலாளர் சங்கம் இயங்கி வருவது பெருமை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும் இவ்வேளையில், அவர் வலியுறுத்திய சத்தியம் மற்றும் அஹிம்சையை தொடர்ந்து கடைபிடிக்கப் போவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version