காந்தியடிகள் அரையாடை தரித்த அடையாள நிகழ்வின் நூற்றாண்டைப் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது மதுரை மாநகரம். அதன் வரலாற்றைப் பேசுகிறது இந்த செய்தித் தொகுப்பு…
மதுரை மேலமாசி வீதியில் உள்ள 251-ம் எண் வீடு, வரலாற்றில் இடம்பெறும் என்று அதுவரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். மதுரைக்கு கதர் பரப்புரைக்காக வந்த காந்தியடிகள் கூட, அதை நினைத்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.
வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக வெகுண்டு எழுந்தபோது அந்நிய துணிகளை புறக்கணித்து, கதர் ஆடைகளின் அவசியத்தை மக்களிடையே நாட்ட, காந்தியடிகள் நாடு முழுவதும் பயணப்பட்டார். அப்படித்தான் 1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி மதுரைக்கு வந்தார் காந்தியடிகள்.
மக்களின் உற்சாக வரவேற்புடன் நுழைந்த காந்தியடிகள், மேலமாசி வீதியில் உள்ள 251-வது வீட்டில்தான் தங்கினார். அங்குதான் அவரது அடையாள அரையாடைக்கான அஸ்திவார வித்து விழுந்தது எனலாம். தனது நெடிய பயணத்தில், இந்திய மக்களின் ஏழ்மையைத் தரிசித்த காந்தியடிகள், தமது கதர் இயக்கத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்க நினைத்தார். தமது உதவியாளரை அழைத்து அவர் அணிந்திருந்த கதர் ஆடையைப் பாதியாக கிழித்தார். அடுத்த நாள், செப்டம்பர் 22, 1921-ம் ஆண்டு தாம் உரையாற்ற வேண்டிய திடலுக்கு அரையாடையை அணிந்துகொண்டு எளிய மனிதராக நடந்தார்.
அந்த நிகழ்வின்பின், தமது வாழ்நாள் முழுவதையும் எளிமையின் அடையாளமாக தாம் பூண்ட அரையாடைக் கோலத்திலேயே கழித்தார். லண்டன் சொசைட்டி கூட்டத்துக்கும் சமரசமின்றி அரையாடையுடனேயே சென்று உரையாற்றினார். வின்ஸ்டன் சர்ச்சிலால் அரையாடை பக்கிரி என்று கேலியும் செய்யப்பட்டார். ஆனால், அந்திக்காலம் வரை துறக்காத அடையாளமாக இருந்த காந்தியடிகளின் அரையாடை அணிந்த நிகழ்வுக்கு, செப்டம்பர் 22 2021 ஆன இன்று நூற்றாண்டு நிறைவு.
மதுரையின் மையப்பகுதியில் மகாத்மா காந்தியின் நினைவுகளைச் சுமந்தபடி, காந்தி நினைவகமாகத் திகழும் மேலமாசிவீதி வீட்டை, தமிழ்நாடு காதி மற்றும் கிராம கைத்தொழில் துறை, கடந்த 1954-ஆம் ஆண்டே விலை கொடுத்து வாங்கி, பராமரித்து வருகிறது. ஆடையைத் துறந்து எறிய, மனிதராய் மக்கள் மனதுக்குள் வித்தாக ஊன்றிய மகாத்மா காந்தியோடு, மாமதுரையும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் சேரனுடன் செய்தியாளர் நவநீதகிருஷ்ணன்.