அதிராம்பட்டினத்தில் கரையை கடந்தது கஜா புயல் -வானிலை ஆய்வு மையம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கஜா புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் மையப்பகுதி கரையை கடந்த நிலையில், நாகை, வேதாரண்யம் பகுதிகளில் அதிகபட்சமாக 111 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களிலும், திருவாரூர், கடலூர், தஞ்சை, காரைக்கால் மாவட்டங்களிலும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், மீட்புப் பணிகள் இரவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தொலை தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த நிலையில், வேதாரண்யம், தஞ்சை, கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக, 6 மாவட்டங்களில் 81 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தீவிர புயலாக இருந்த கஜா, வலுக்குறைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிராம்பட்டினத்திற்கு மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. புயல் வலுவிழந்தாலும், மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version