ஜப்பானில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜி20 மாநாடு ஜப்பானின் ஒசாகாவில் இன்று துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றடைந்தனர்.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இடையேயான முத்தரப்பு சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் முதல் எழுத்தை குறிப்பிட்டு ‘ஜெய்’ என்றும் அதற்கு அர்த்தம் வெற்றி என்றும் கூறினார்.
இதேபோல் மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு டிரம்ப் தனது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார். ஜப்பானில் 2-வது முறையாக பிரதமராக வெற்றி பெற்றுள்ள அபேவுக்கு டிரம்ப் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மக்களுக்கு ஆற்றிய பணிகளுக்கு அங்கீகாரமாக தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார்.