கரூரில் கவாசாகி என்ற நோய் பாதித்த ஒன்றரை வயது குழந்தையை குணமாக்கி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
1967 ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் கவாசாகி என்பவரால் இந்நோய் கண்டறியப்பட்டது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மட்டுமே தாக்கும் இந்நோயால், கடுமையான காய்ச்சல், தோல் பாதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, இறுதியில் உயிரிழப்பு கூட ஏற்படும். கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை சேர்ந்த பழனிசாமி என்பவரது ஒன்றரை வயது குழந்தை ஹரீஸ் இந்நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக குழந்தைக்கு 16 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை குணமடைந்தது. இருப்பினும் தொடர்ந்து 6 மாத காலம் குழந்தை கண்காணிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.