டீக்கடை சிறுவனாக இருந்து கால்பந்தாட்டத்தின் அடையாளமாக மாறிய "பீலே"

பள்ளிக்கு சென்று வந்தாலும், ஏழ்மையின் காரணமாக, ஷூ பாலீஷ் போட்டுக்கொண்டும், பணக்காரர்கள் வீட்டு தரையைத் துடைத்துக்கொண்டும், `டீக்கடை’யிலும் வேலை செய்துகொண்டிருந்த ஒரு சிறுவன், பிற்காலத்தில் பிரேசிலின் அடையாளமாக மாறினார். அவர்தான் ”பீலே”

கார்கோவடோ மலையில் நின்றுகொண்டு, தன் இரண்டு கைகளையும் விரித்து அருள் புரிந்துகொண்டிருக்கும் இயேசுவின் சிலை ‘பிரேசில் தேசத்துக்கு நீண்ட காலமாக அடையாளமாக’ இருந்தது. ஆனால், ஒரு சிறுவனிடம் தன் அடையாளத்தை இழந்தது அந்தச் சிலை. பீலே, சிறுவயதில் வறுமையின் காரணமாக காலணி உறைகளில் காகிதங்களை திணித்து பந்தாக மாற்றி நண்பர்களோடு விளையாடுவார். பீலே சிறுவயதில் தன் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரைக்கொண்டு ஒரு கால்பந்து குழுவை உண்டாக்கினார் “Shoeless once” காலணி இல்லாதவர்கள் என்பது அவர் உண்டாக்கிய அணியின் பெயராகும்.

தெருக்களில் பீலே விளையாடுவதை கண்ட பிரேசில் அணியின் பிரபல ஆட்டக்காரர் வால்டிமர் பிரிட்டோ உள்நாட்டு அணியான சாண்டோஸ் அணியிடம் இவரை ஒப்படைத்து ஒருநாள் இவன் கால்பந்து விளையாட்டில் உலக அளவில் புகழ் பெறுவான் என வாக்குரைத்தார்.

சாண்டோஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகும் போது பீலேவின் வயது 15. 1956 செப்டம்பர் 7ம் தேதி தன் அணிக்காக கொரிண்டியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நான்கு கோல்களைப்போட்டு அனைவரையும் தன் பக்கம் திருப்பினார் பீலே.

இவரது ஆட்டத்திறன் இவரை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி சென்றது பிரேசில் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 17வயதில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இளம் வீரர் எனப்பெயர் பெற்றார் சுவிடனுக்கு எதிராக விளையாடிய அந்தப்போட்டியில் இரண்டு கோல்களை அடித்து தாய் நாட்டுக்கு வெற்றி தேடித்தந்தார்.

பீலே தன் வாழ்நாள் முழுவதும் 1,283 முதல் தர கோல்களை அடித்துள்ளார். மேலும் 97 ஹாட்ரிக் கோல்களும் ஒரே ஆட்டத்தில் 4 கோல்களை 31 முறையும் 8 கோல்களை ஒரு முறையும் அடித்துள்ளார்.இதில் 77 கோல்கள் பிரேசில் அணிக்காக அடித்ததும் அடக்கம்.

மூன்று உலகக்கோப்பை, இரண்டு உலகக்குழு வாகையர் பட்டம், ஒன்பது முறை சா பவுலோ மாநில அணி வாகையர் பட்டம் என வெற்றிக்கணக்கினை வைத்துள்ளார்.1969ம் வருடம் நவம்பர் 19ம் தேதி பீலே தனது 100வது கோலினை அடித்தபோது அவரது ரசிகர்கள் உற்சாக மிகுதியால் மைதானத்தில் நுழைந்து ஆனந்த நடனமாடினர் அவர்களை அப்புறப்படுத்தி ஆட்டத்தை தொடர ஆட்ட வீரர்கள் அரைமணி நேரம் காத்திருந்தனர்.

1967ஆம் ஆண்டு நைஜிரியாவில் இரண்டு இனக்குழுவினரிடையே கடுமையான உள்நாட்டுப்போர் நடைபெற்ற போது இவர் விளையாடுவதை காணுவதற்க்காக 48 மணி நேரம் சண்டை கைவிடப்பட்டது.

கால்பந்து விளையாட்டின் முடிவில் இரண்டு அணியினரும் நட்பு ரீதியாக தங்களது சட்டைகளை மாற்றிக்கொள்வது வழக்கம். பெரும்பாலும் பீலேவின் சட்டையை மாற்றிக்கொள்வதில் எதிரணி வீரர்கள் பெருமையாக நினைப்பர். இவரது குழுவினர் இவருக்காக குறைந்தது 25 முதல் 30 சட்டைகளை ஒவ்வொரு போட்டியின் போதும் கொண்டு செல்வர்.

பீலேவின் தந்தையும் ஒரு கால்பந்தாட்ட வீரர்தான் ஒரு ஆட்டத்தில் அவர் தலையால் முட்டி 5 கோல்களைப்போட்டார். அந்த சாதனையை பீலேவால் கடைசிவரை உடைக்கமுடியாமல் போனது அவர் அதிக பட்சமாக 4 கோல்கள் மட்டுமே போட்டார். தனது 100வது கோலினை தலையால் முட்டி போட்ட போது அதனை தன் தந்தைக்கு சமர்ப்பணம் செய்தார்.

பீலேவின் கடைசியாட்டம் 1977ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நடைபெற்றது. சாண்டோஸ் மற்றும் நியூயார்க் இடைப்பட்ட போட்டியில் பீலேவை கெளவுரபடுத்தும் விதமாக இரண்டு அணியிலும் அவரை ஆடுமாறு பணிக்கப்பட்டது. முதல் பாதியில் சாண்டோஸ் அணிக்காகவும் இரண்டாம் பாதியில் நியூயார்க் அணிக்காகவும் விளையாடினார்.

1995ஆம் ஆண்டு பிரேசில் அரசு பீலேவுக்கு உயரிய விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை வழங்கியது.1997ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இவருக்கு புகழ்பெற்ற நைட்வுட் என்னும் பட்டத்தினை வழங்கியது.1999ஆம் ஆண்டு உலக ஒலிம்பிக் குழுவினரால் நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்று அறிவிக்கப்பட்டார்.2000மாவது ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நூற்றாண்டின் இரண்டாவது சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதினை வழங்கியது. அதற்குமுன் முகமது அலிக்கு அவ்விருது வழங்கப்பட்டது.2014ஆம் ஆண்டு பன்னாட்டுக் காற்பந்தட்டக் கழகங்களின் கூட்டமைப்பால் பீலேவுக்கு பாலோன் தி’ஓர் BALLON D’OR விருதினை வழங்கி கவுரவித்தது.2017ஆம் ஆண்டு பன்னாட்டுக் காற்பந்தட்டக் கழகங்களின் கூடடமைப்பால் பிலேவுக்கு INSPIRATION OF THE YEAR விருதும் வழங்கப்பட்டது.

Exit mobile version