மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரண்டாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று முதலே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போதும் விடிய விடிய மழை பெய்துள்ளதால், இரண்டாவது நாளாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இதேபோல், தேனி மாவட்டம், கம்பம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்து உள்ளது. எனவே அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.