கேரளாவைப் போலவே, கர்நாடகாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா அணைகள் முழு கொள்ளவை எட்டியதையடுத்து, உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு 1 லட்சத்து 92 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்தநிலையில், கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பவானிசாகர் அணை மற்றும் அமராவதி அணையும் நிரம்ப உள்ளநிலையில், அங்கிருந்தும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக காவிரி ஆற்றில் சுமார் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு உள்ளதால், கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.