கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் களமிறங்கி உள்ளனர்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் பதவி இருந்து நீக்கப்பட்டதாலும், அமைச்சர் பதவி கிடைக்காததாலும் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து பேசிய அவர்கள், பின்னர் தனி விமானம் மூலம் மும்பை சென்றடைந்தனர். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் எம்.எல்.ஏ.க்கள் 12 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வருகிற 10ம் தேதி வரை அவர்கள் அங்கு தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் குமாரசாமி இன்று மாலை பெங்களூரு திரும்பியதும், எம்.எல்.ஏ. க்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறியுள்ள எடியூரப்பா, கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் திருப்பங்களை பொருத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் கர்நாடகாவில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது.