சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் : கோத்தபய ராஜபக்சே

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என பிரதமர் மோடியை சந்தித்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உறுதியளித்தார்.

இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசு முறை பயணமாகவும், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றும் இந்தியா வந்துள்ளார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கான வழிகள், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இலங்கை கடற்படையால் நீண்ட காலமாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதி அளித்தார். இந்த அறிவிப்பு, தமிழக மீனவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Exit mobile version