சுருக்குமடி வலை தொடர்பான அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் பங்கேற்பதில்லை என்று மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீன்பிடித்தொழில் உள்ள பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், கூட்ட முடிவில் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலை பயன்பாடு தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு, அழைத்தால் மூன்று மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்வதில்லை என்றும், இரட்டைமடி, சுருக்குவலை, ஸ்பீடு இஞ்சின் ஆகியவற்றை பயன்படுத்துவதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மீன்பிடி தொழில் மசோதாவை கடுமையாக எதிர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை 2 வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மீனவ பெண்கள் திடீரென கடலில் இறங்கி போராடியதாலும், போராட்டத்தில் பங்கேற்ற உண்ணாவிரதத்தில் இருந்த சிலர் மயக்கமானதாலும் அங்கு பதற்றம் நிலவியது. தங்கள் கோரிக்கை குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நிபந்தனையுடன் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.