தமிழகத்தில் வரும் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதிவரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஓழுங்குப்படுத்தும் சட்டம் 1983ன் கீழ் கடல்பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாளை மறுதினம் முதல் ஜூன் 14ம் தேதிவரை 61 நாட்களுக்கு கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகர் கடற்பகுதி வரையில் உள்ள கிழக்கு கடல் பகுதி முழுவதிலும் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடிக்கக்கூடாது என படகு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் தங்கு கடல் மீன்பிடிப்புக்கு சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நாளை இரவு 12 மணிக்குள் கரை திரும்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மீறி மீன்பிடி தடைகாலத்தில் கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், இழுவலைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.