பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை தளர்த்த கோரி விருதுநகர் மாவட்டத்தில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றனர்.
பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனிடையே வாழ்வாதாரத்தை இழந்த பட்டாசு தொழிலாளர்கள் சமீபத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில், பட்டாசு உற்பத்திக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்த வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் இன்று 10 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.