எட்டு வழிச்சாலை திட்டத்தில் வாய்மூடி மௌனமாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து சேலம் மாவட்டம் பூலாவரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் முதல் சென்னை வரை எட்டுவழிச்சாலை போடும் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. வாழ்வாதாரத்தைக் கபளீகரம் செய்யும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
இதனிடையே இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடையே பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திமுக ஒருபோதும் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவில்லை என்று முன்னுக்குப்பின் முரணாக கருத்து தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் 8 வழிச்சாலை குறித்து இதுவரை வாய்த்திறக்காமல் மௌனமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் மற்றும் முதலமைச்சரை கண்டித்து சேலம் மாவட்ட விவசாயிகள் கால்நடைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.