விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி சீரமைப்பு பணியில் மாணவிகளை ஈடுபடுத்திய போது, ஆசிட் பாட்டில் தெறித்து மாணவியின் முகம் மற்றும் கண் பாதிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள வள்ளலார் அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த ஒரு வாரமாக பள்ளி கட்டட சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் இன்று பள்ளியின் வேதியியல் ஆய்வக வகுப்பை சீரமைக்கு பணிக்கு வேலை ஆட்கள் வராத நிலையில், ஆய்வகத்தில் இருந்த கெமிக்கல் பொருட்களை இடமாற்றம் செய்யும் பணியில், பள்ளியில் படிக்கும் பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவிகளை ஆசிரியர்கள் ஈடுபடுத்தியுள்ளனர். ஆசிட் உள்ளிட்ட கெமிக்கல் பொருட்களை பெரிய அட்டைப்பெட்டிகளில் வைத்து மாணவிகள் எடுத்துச் சென்ற போது, மேற்கூரையில் இருந்து பெரிய கல் அட்டைப்பெட்டி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அட்டைப்பெட்டியில் இருந்த ஆசிட் பாட்டில்கள் உடைந்து சிதறி மாணவிகள் மீது ஆசிட் தெறித்ததுள்ளது. இதில், அட்டைப்பெட்டியை தூக்கி சென்ற மாணவியின் முகம் முழுவதும் ஆசிட் தெறித்ததில் அவர் படுகாயமடைந்து அலறித் துடித்தார். மேலும், உடன் சென்ற மற்ற 3 மாணவிகள் மீதும் ஆசிட் பட்டு காயமடைந்தனர். இந்நிலையில், மாணவிகள் உடனடியாக புதுச்சேரி அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில், முகம் முழுவதும் படுகாயமடைந்த மாணவியின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால், அவர் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகள்கள் காயமடைந்தது குறித்து தகவலறிந்த பெற்றோர்கள், மருத்துவமனைக்கு விரைந்தனர். பள்ளி மாணவர்களை வேலைக்கு உட்படுத்தியதால் விபத்து ஏற்பட்டு மாணவிகள் படுகாயமடைந்துள்ள நிலையில், அப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Discussion about this post