தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த 3 நாட்களில் மட்டும் 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் அரசு பேருந்து மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர்.
கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக கட்டணம் தொடர்பான புகாரை அடுத்து 1,431 ஆம்னி பேருந்துகள் பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறினார்.
சோதனையில் 31 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வரை பிணை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாத 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். விரைவில் மின்சார பேருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் திரும்பி வருவதற்கு வசதியாக 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.