குடியுரிமைச் சட்டத்தால் அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீர் விவகாரங்கள் தொடர்பாக, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 5 அமைப்புகள், 6 தீர்மானங்களை கொண்டு வந்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தால், உலக அளவில் அதிக அகதிகள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்றும் இது மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பிரசல்ஸ் நகரில் வரும் 29ஆம் தேதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று, 30ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் எனவும் கூறியுள்ளது.