ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்கும் சேகரிக்கும் பணியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறாடாவுமான எஸ்.பி.வேலுமணி அவர்கள் ஈடுபட்டார். பிறகு செய்தியாளரை சந்தித்த அவர் பேசியது பின்வருமாறு உள்ளது.
கழக இடைக்கால பொதுசெயலாளர் முன்னாள் முதல்வர் வருங்கால முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. பொதுமக்கள் செல்லும் இடமெல்லாம் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அத்தனை நலத்திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுகதான். திமுக ஆட்சியில் எந்த நலத்திட்டமும் ஈரோடு மாவட்டத்திற்கு வரவில்லை. எங்களின் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கழக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பல திட்டங்கள் வருவதற்உ காரணமாக இருந்தனர். எனவே தென்னரசு அவர்கள் வென்று வந்தால் மக்களுக்கு ஓடியோடி உழைப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலில் இறங்கியுள்ளார். மிகப்பெரிய கூட்டிக்கொள்ளை அடித்து அந்த பணத்தின் மூலம் மக்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதுவெல்லாம் நடக்காது. மின்சார கட்டணம் உயர்வு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தருவதாக சொல்லி தரவில்லை, முதியவர்களுக்கான ஓய்வூதியத் தொகை குறைப்பு இது மாதிரி பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் ஆள்பவர்கள். எனவே மக்கள் கண்டிப்பாக திமுகவினைத் தவிர்த்து அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.