அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாஸ் ஸ்பீச்!

கடந்த அதிமுக ஆட்சியில் மிக சிறப்பாக செயல்பட்ட அனைத்து அரசு துறைகளும், விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு செயலிழந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையாக சாடியுள்ளார்.

கோவையில் உள்ள இதய தெய்வம் மாளிகையில், மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு விழிப்புணர்வு வாகனத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என தெரிவித்தார். மதுரை மாநாடு முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோட்டைக்கு செல்வது உறுதி என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார். மேலும், கோவையில் செம்மொழி மாநாடு, திமுகவின் குடும்ப மாநாடாக நடைபெற்றதாகவும் அவர் விமர்சித்தார். விடியா ஆட்சியில் எல்லா இடங்களிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், இடைத்தேர்தலில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக திமுக எதுவுமே செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில் மிக சிறப்பாக செயல்பட்ட அனைத்து அரசு துறைகளும், விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு செயலிழந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையாக சாடினார்.

Exit mobile version