தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர், இன்று அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் தொடர்ந்தனர். இதில், சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து பாகிஸ்தான் அவசர ஆலோசனை நடத்தி உள்ளது. பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் தாக்குதலை எதிர்பார்த்த ஒன்று என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளது.