உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிமாநிலத்தவர்கள் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வால்ராசாம்பாளையம், மோடமங்கலம், தண்ணீர்பந்தல்பாளையம் ஆகிய இடங்களில், 98 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர், சாலை, மகளிர் குழு கட்டடம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெற்றன. இவற்றில் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதிகளில் 400 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இப்பணிகள் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் 30 ஆண்டுகளுக்கு இப்பகுதியில் குடிநீர்ப் பிரச்சனை ஏற்படாது என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.தமிழகத்தில் மின் உற்பத்தி திருப்திகரமாக உள்ளதால் மின்வெட்டு ஏற்படாது என்றார். அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப புதைவட மின் கம்பிகள் திட்டம் பரவலாக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.