உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றியை நிலைநிறுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.  

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது, ஆனால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு நூலிழையில் தவறியது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் இணைஇணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து தொகுதி வாரியாக கேட்டறியப்பட்டன.

மேலும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை பாடமாக வைத்து எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் அதிமுக கைப்பற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

மேலும் திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் முன் கொண்டு வரும் பணிகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version