தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்தது திமுக, முதியோர் உள்பட அனைத்து தரப்பினரையும் ஏமாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றினார்.
அப்போது பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கல்வியில் பின் தங்கிய மாவட்டமான விழுப்புரத்தை திமுக அரசு வஞ்சித்து இருப்பதாக சாடினார்.
மக்களுக்காக உழைக்கும் விவசாயிகளின் நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல் வேண்டுமென்றே திமுக அரசு காலம் தாழ்த்தி கொச்சைப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக, தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதியோர் உள்பட அனைத்து தரப்பினரையும் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.
திமுக அரசின் கபட நாடகங்களை இனி மக்கள் நம்ப மாட்டார்கள் எனக் கூறிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே கட்சியான அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.