சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
2017ம் ஆண்டில் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் வராத எட்டரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
கருப்புப் பணத்தை ஹவாலா பரிமாற்றம் மூலம், வெள்ளையாக மாற்றி டெல்லியில் வீடுகள் வாங்கியதற்கான ஆவணங்கள் கிடைத்ததாகவும், அதில், சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் வருமான வரித்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் கடந்த 30ம் தேதி ஆஜரான சிவக்குமாரை இம்மாதம் 3ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்தநிலையில் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.