தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சார் பதிவாளர் அலுவலகத்தை, ஆளும் கட்சி துணையுடன் சுயநலப் போக்கில், அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் காட்டுப் பகுதியில் சிலர் இடம் மாற்ற முயற்சி மேற்கொண்டதால், தற்போது சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் அங்கு கட்டப்பட்டு வருகிறது.
பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றம் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, உடன்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் குணசீலன், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோரை ஒன்று சேர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் அவருக்கு ரியல் எஸ்டேட் தொடர்புடைய நபர் ஒருவரிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி 24ஆம் தேதி, உடன்குடி ஆர்.சி.சர்ச் அருகில் இரு சக்கரவாகனத்தில் வந்த குணசீலன் மீது ரியல் எஸ்டேட் தொடர்புடைய நபர் காரைக் கொண்டு மோத முயன்றதாகக் கூறி குணசீலன் குலசேகரப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆறுமுகநேரி பகுதியில், கஞ்சா விற்பனைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் பாலகுமரேசனை மர்ம கும்பல் ஒன்று அவரது உணவகத்துக்குள் புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.
தற்போது மற்றொரு சமூக ஆர்வலரையும் கொலை செய்யும் முயற்சி அரங்கேறியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நலனுக்காக குரல்கொடுப்பவர்களை ஒழித்துக் கட்ட நினைக்கும் சமூக விரோதிகளுக்கு இந்த அரசு ஆதரவாக செயல்படுகிறதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.