ஆவின் பால் நிர்வாகத்துக்கு பால் ஊத்தும் விடியா அரசு!

பால் உற்பத்தியாளர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு ஆவின் ஒன்றியங்களுக்கு, பால் வரத்து குறைந்து உள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் ஒன்றியங்களுக்கு பால் வரத்து கடுமையாக குறைந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆவின் பால் வினியோகம் என்பது முற்றிலும் தடைபட்டுள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெல்லை ஆவின் ஒன்றியத்துக்கு பெறப்படும் ஒன்றரை லட்சம் லிட்டர் பாலில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் Packing செய்யப்பட்டு, நெல்லை மாவட்டத்துக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

இதில், நெல்லை மாவட்டத்திற்கு 70 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்தது போக மீதமுள்ள பால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான சுமார் 60 ஆயிரம் லிட்டர் பால் முற்றிலும் வரத்து இல்லாததால் பால் வினியோகம் இதுவரை தொடங்கவில்லை என்பது பால் முகவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. பால் உற்பத்தியாளர்களின் பால் நிறுத்த போராட்டத்தால் ஏற்படும் பால் தட்டுப்பாட்டினை போக்க, வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்டவற்றை வாங்கி ஆவின் பாலுடன் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் பால் பவுடரும், வெண்ணையும் கலந்து ஆவின் பாலுடன் விற்பனை செய்ததால் லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஆவினுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே பால் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கலப்பட நடவடிக்கையை தற்போது ஆவின் நிர்வாகம் நிறுத்திவிட்டு, பால் விற்பனையை குறைத்துக் கொள்ள மாவட்ட ஒன்றிய ஆவின் நிர்வாகத்திற்கு, ஆவின் தலைமையிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவு வெளியாகி உள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பால் உற்பத்தியாளர்கள் உயர்த்தி கேட்கும் தொகையை வழங்கி இருந்தால் கூட, ஆவின் நிர்வாகத்திற்கு இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்காது என்பது பால் உற்பத்தியாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி பால் விநியோகத்தை விரைவில் ஆவின் நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால், தமிழகத்தில் ஆவின் பால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, தனியார் பால் பாக்கெட்டுகள் விற்பனை அதிகரித்து விடும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஒரு மாதமாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது பால் தட்டுப்பாடு ஏற்படுவதும், அவற்றை மூடி மறைப்பதுமே ஆவின் நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையாக இருப்பதாகவும் பால் முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version