தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பெற்றுத் தர திமுக ஒருபோதும் அக்கறை காட்டவில்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.கே மூர்த்தி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சம்பத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்த துணை முதலமைச்சர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியினால் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை சுட்டிக் காட்டினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தினகரனை தேர்தலில் வெற்றி பெறச் செய்ததாக அவர் தெரிவித்தார். அதே தினகரனை அதிமுகவிலிருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கி வைத்ததையும் துணை முதல்வர் சுட்டிக் காட்டினார்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் தாங்கிப் பிடிக்கும் மாபெரும் ஆலமரமாக அதிமுக திகழ்வதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும், எந்தவித தொய்வும் இன்றி அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் இருந்த போது அப்பாவி மக்கள் மீது அராஜகமும், வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார். ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏழுமலைக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுகவினர் பிரியாணி கடை, பஜ்ஜி கடைகளில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபடுட்டதை சுட்டிக்காட்டினார்.
திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து காஞ்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மகப்பேறு காலத்தில் நிதியுதவி வழங்கும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் திமுகவை மக்களவைத் தேர்தலோடு காணாமல் போக செய்யுமாறு பொதுமக்களிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டார். இதன்மூலம் தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரம் மீண்டும் பரவாமல் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.