சென்னை குன்றத்தூரில் திமுக பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழியாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தி தொகுப்பு…
குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், காலடிப்பேட்டை, நாகரத்தினம் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சவுபாக்கியவதி. இவரை கடந்தாண்டு மோகன் என்பவர், காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்தை மோகனின் அக்கா கணவரும், திமுக பிரமுகருமான கிரிராஜன் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சவுபாக்கியவதியின் தந்தை பாபு, கடந்தாண்டு செப்டம்பர் 10ம் தேதி, கிரிராஜனை ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார். இந்த வழக்கில் பாபு உட்பட நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில், சிறையில் இருந்து வெளியே வந்த பாபுவை பழிவாங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இறந்த கிரிராஜனின் மைத்துனர் மோகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர்,அதற்கான சரியான சமயம் பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், கிரிராஜன் படுகொலை செய்யப்பட்ட நந்தம்பாக்கம், அஞ்சுகம் நகருக்கு அடுத்த தெருவான நாலியப்பன் சாலை, பாரதியார் நகர் மெயின்ரோடு பகுதியில் பாபு தனியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தார் அப்போது மோகன் மற்றும் கிருஷ்ணன் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பாபுவை வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.
சுதாரித்துக்கொண்ட பாபு அங்கிருந்து தப்பியோடினார். ஆனாலும், ஓட ஓட விரட்டி, அவரது தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் பாபு அணிந்திருந்த ஹெல்மெட் சுக்கு நூறாக சிதறி, தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குன்றத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பாபு உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மோகன், கிருஷ்ணன் தலைமையிலான கும்பலை தேடி வருகின்றனர்.