முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த தொழிற்சாலை உரிமையாளரான திமுக எம்.பி ரமேஷ், சரணடைந்ததையடுத்து, அவரை 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன் குப்பம் பகுதியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணி செய்துவந்த கோவிந்தராசு என்பவர், கடந்த மாதம் 20-ம் தேதி உயிரிழந்தார்.
மர்மமான முறையில் உயிரிழந்த அவரது உடலை மீட்ட காடாம்புலியூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இறந்த கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை அடுத்து வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டதில், தொழிற்சாலை உரிமையாளர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இதில், தலைமறைவாக இருந்த முதல் குற்றவாளியான ரமேஷ், தற்போது பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நீதிபதி கற்பகவல்லி முன்னிலையில் சரணடைந்தார்.
சரணடைந்த திமுக எம்.பியை விசாரித்த பண்ருட்டி நீதிமன்ற நீதிபதி, அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சிபிசிஐடி போலீசார் தேடிவந்ததாகக் கூறியதை அடுத்து, விசாரணை நடத்தி வருகிற 13-ம் தேதி, திமுக எம்.பி. ரமேஷை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார், அவரை கடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.