அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்

அரசு நிலத்தை அபகரித்த வழக்கில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், தேவைப்படும் போது விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோ நிலத்தை முறைகேடாக திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், தனது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, மா.சுப்பிரமணியன் முன்ஜாமின் கோரிய வழக்கு விசாரணை, நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது. இதையடுத்து மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், மா.சுப்பிரமணியன் வாரிசு என்று கூறி நிலத்தை அபகரித்தது குறித்தும், சிட்கோவிடமும், மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் நிலத்தை கையகப்படுத்தியது குறித்தும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேவைப்படும் போது விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக்கூடாது என்றும், தலைமறைவாகக் கூடாது என்றும் கூறி, நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version