15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அச்சிறுமியின் மரணத்துக்கு காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
பெரம்பலூர் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜ்குமார் (2006 – 2011),வயது (52). கடந்த 2012 ஜூன் 23 ம் தேதி தமிழக கேரள எல்லையான இடுக்கியில் உள்ள பீர்மேடு பகுதியைச்சேர்ந்த இந்த சிறுமி ராஜ்குமாரின் இல்லத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்திருக்கிறார். சேர்ந்து சில நாட்களிலேயே சரியாக ஜுன் 28ம் தேதி தன் தந்தைக்கு அழைத்து தன்னை இங்கிருந்து கூட்டிச்செல்ல வேண்டிக்கேட்டிருக்கிறார். அவரும் வந்து அழைத்துப்போவதாகச்சொல்லியிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இங்கிருந்து (பெரம்பலூர்) அழைப்பு போனது அவள் தந்தைக்கு .
இதையொட்டி காவல்துறை தற்கொலை முயற்சி என்று வழக்குப்பதிவு செய்தது. வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே இந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். வேறு வழியின்றி வேலைக்கு அனுப்பிய தன் மகள் வெற்றுச் சடலமாகத் திரும்பியது கண்டு மனமுடைந்தார் தந்தை.
இந்நிலையில் இறுதிச்சடங்குகளின் போது குழந்தையின் உடலில் சந்தேகத்திற்குரிய வகையில் காயங்களைக் கண்ட உறவினர்கள் அந்தப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம் எல் ஏ பிஜுமோலிடம் தெரிவித்தனர்.
கோட்டயம் அரசுமருத்துவமனை மருத்துவர் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தார். இதனையடுத்து பீர்மேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார் தந்தை . விசாரணைக்காக வழக்கு பெரம்பலூர் காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்து போனதைத் தொடர்ந்து,சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததை தொடர்ந்து,முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு,கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் போலீசில் சரண் அடைந்தார். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்…
இந்த வழக்கு பெரம்பலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது ராஜ்குமார் நண்பர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் இறந்து போனார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. சாந்தி,குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு பாலியல் வன்கொடுமை, மரணம் நிகழும் என தெரிந்தே குற்றம் செய்தல், கூட்டு சதி ஆகிய பிரிவின் கீழ் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் 30,000 ரூபாய் அபராதமும் விதித்து அதை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும், இன்னொரு குற்றவாளியான ஜெய்சங்கருக்கு கூட்டு சதி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும்12,000 ரூபாய் அபராதமும் விதித்து தீப்பாளித்தார்.மற்றவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சமூகம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டி ஓடிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்திருக்கும் இந்த வழக்கு இதுபோன்ற குற்றவாளிகளுக்கு நல்ல பாடம்.