முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அரசின் குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், சத்துணவு, அங்கன்வாடி குழந்தைகள் திட்டம், முதியோர் ஓய்வூதியம், குடிநீர் விநியோகம், சுகாதாரத் திட்டங்கள், பட்டா வழங்குதல், நெகிழி ஒழிப்பு, வேளாண் சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, ஒவ்வொரு மாதமும் கள ஆய்வு செய்து, அந்த விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாதம் தோறும் முதலமைச்சர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, முதலமைச்சர் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்ததால், மாநிலத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காகவே, தமிழ்நாடு நீர்வள ஆதார மற்றும் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்மூலம், நீராதாரங்களை பாதுகாத்தல், அதை பழைய நிலைக்கு மீட்டெடுத்தல், நீர் நிலைகள் மாசுபடாமல் தடுப்பது, பயன்படுத்திய மறுசுழற்சி செய்வது மற்றும் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காமல் சேமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசு, மக்களின் அரசு என்பதை மக்கள் உணரும்படி, மாவட்ட ஆட்சியர்கள், களத்தில் இறங்கி அரும்பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.