ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசவப்புரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். டிடிவி தினகரனும் திமுகவும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு அதிமுகவுக்கு கொடுத்து வரும் நெருக்கடியை மக்களாகிய நீங்கள்தான் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டிவி சேனல்களுக்கான கட்டணத்தை 100 ரூபாய்க்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்ட ஒரே இயக்கம் அதிமுக என்றும் குடும்ப அரசியலுக்காக மட்டுமே செயல்படும் கட்சி திமுக என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், ஏழைகளுக்காகவே உழைக்கும் கட்சி அதிமுக என்றும் அவர் குறிப்பிட்டார். காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக என்று கடுமையாக சாடினார்.
அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டரும் தலைமை பதவிக்கு வர முடியும் என்று கூறிய முதலமைச்சர், வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனையும், வீடு இல்லாதவர்களுக்கு வீடும் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு கேக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.