ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்க, 5 கூடுதல் காவல்துறை இயக்குனர்களை நியமித்து, டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, தமிழகம் முழுவது பாதுகாப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக காவல்துறை மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை, திருப்பூர், சேலத்தை தலைமை இடமாகக்கொண்ட மேற்கு மண்டலத்திற்கு சங்கர் ஜிவால், மதுரையை தலைமை இடமாகக் கொண்டு மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் பகுதிகளுக்கு அபய்குமார் சிங், திருச்சியை தலைமை இடமாகக் கொண்ட மத்திய மண்டலத்திற்கு சைலேஸ் குமார் யாதவ், காஞ்சிபுரத்தை தலைமை இடமாகக் கொண்ட வடக்கு மண்டலத்திற்கு தாமரைக்கண்ணன், திருநெல்வேலியை தலைமை இடமாகக்கொண்டு, நெல்லை சரகத்திற்கு மகேஷ் குமார் அகர்வால் என ஐந்து கூடுதல் காவல்துறை இயன்குநர்களை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த அதிகாரிகளின் தலைமையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.