ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதுதொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்- 2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேறி 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் 30ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. அவர்கள் இருவரும் இன்று பதவியேற்றனர். காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு புதுச்சேரியில் இருப்பது போல சட்டப்பேரவை இயங்கும். அங்கு காவல் மற்றும் சட்டம்- ஒழுங்கு போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிலம் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வசம் இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், சண்டிகாரைப் போல சட்டசபை இன்றி செயல்படும். அங்கு ஆட்சி முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவின் மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version