சொத்துக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் ஆசைப்பட்டு 3வது கணவனுக்கு விஷ ஊசி செலுத்திவிட்டு, 4வதாக திருமணம் செய்து கொண்ட மோசடி கல்யாண ராணி தான், திண்டுக்கல்லை சேர்ந்த 35 வயதான தேவி. 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள, குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த 52வயது விவசாயி சுப்பிரமணியனுக்கும், தேவிக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் சுப்பிரமணியனை திண்டுக்கல்லுக்கு வந்துவிடுமாறு தேவி கூறியுள்ளார். ஆனால் அவர் வரமறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தேவி அவருக்கு ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவு இழந்த சுப்பிரமணி திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ரத்தத்தில் பூச்சி மருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே தேவியும் அங்கிருந்து மாயமாகியுள்ளார். இதையடுத்து மனைவியே தனக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றதாக தேவி மீது சுப்பிரமணியன் குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் தேவியின் செல்போன் எண்ணைக் கொண்டு தேடியதில் அவர் நாமக்கல்லில் இருப்பது தெரியவர அங்கு சென்று தேவியை கைது செய்து விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. ஆடம்பர வாழ்க்கைக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்ட தேவி, அதற்காக மோசடி திருமணங்களை அரங்கேற்றி வந்துள்ளார். ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து அவர்களை டீலில் விட்ட தேவி, மூன்றாவதாக விவசாயி சுப்பிரமணியனை திருமணம் செய்துள்ளார்.
சுப்பிரமணியனிடம் இருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க நினைத்தவர், அவருக்கு விஷ ஊசி செலுத்தியுள்ளார். சுப்பிரமணியன் உயிரிழக்காததால் அங்கிருந்து தப்பி நாமக்கல் சென்றவர், அங்கு கோடீஸ்வரரான ரவி என்கிற ராமனை 4வதாக திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே ரவி தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணத்துக்கு பெண் பார்த்த தகவல் கிடைத்து, தேவி அவரை ஜனவரி 27ஆம் தேதி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
போலீசாரின் விசாரணையில் தேவியின் திருமண மோசடிகள் தெரியவந்த நிலையில் அவரைக் கைது செய்தவர்கள், அவரிடம் இருந்த 6 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இந்த திருமண மோசடிக்கு தேவியுடன் தொடர்பில் இருந்தவர்கள், விஷ ஊசி வாங்கிக் கொடுத்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே திருமணம் செய்தவர்களின் நிலை குறித்தும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடம்பர வாழ்க்கைக்காகவும், சொத்துக்காகவும் இதுபோன்ற மோசடி திருமண ராணிகள் உலவும் உலகில் ஆண்களே உஷார்.