“மீ டூ” பாலியல் புகார்களை விசாரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ‘மீ டூ’ என்னும் ஹேஷ் டேக் மூலம் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தமிழகத்தில் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டு, நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் கூறிய புகார், இந்திய அளவில் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர், நடிகர் நானா படேகர் ஆகியோர் மீதான புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் ஜோகிந்தர் குமார் சுகிஜா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ‘சமூக ஊடகங்கள் மூலம் இதுபோல் கூறப்படும் புகார்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகமும் தங்கள் கடமையைச் செய்ய தவறி விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
எனவே இந்த அமைப்புகள் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்த அவர்கள், எங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கடிந்து கொண்டனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் இருந்தால் அவர் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும்’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.