ஆன்லைன் மருந்து விற்பனைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை

ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்வது போல, மருந்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விற்பனை முறையான வழிகாட்டுதல் இன்றியும் மருத்துவர்கள் பரிந்துரை இன்றியும் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக டெல்லியை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் ஜாகிர் அகமது என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ஆன்லைனில் விற்கப்படும் பெரும்பாலான மருந்துகள் அனுமதி பெறாதவை என்றும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திர மேனன் அமர்வு, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்தவும் டெல்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Exit mobile version