ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் 26-வது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 65 ரன்களும், அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரசல் 45 ரன்களும், ராபின் உத்தப்பா 28 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால், ரபடா, மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.5 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. டெல்லி அணியில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 97 ரன்களும், ரிஷாப் பான்ட் 46 ரன்களும் எடுத்தனர்.

Exit mobile version